முத்து நகர் தூத்துக்குடியில் விலையேறப்பெற்ற முத்தாக, இறைவன் தந்த சொத்தாக விளங்குகிறாள் இங்கு பல ஆண்டுகளாகக் கோவில் கொண்டுள்ள புனித பனிமய அன்னை. இவள் அற்புதங்கள் பல புரிந்து வரும் அன்புத் தாய்.
முத்துக்குளித்துறையில் வாழும் பரத குல மக்களும், உள் நாட்டில் வாழும் பலதரப்பட்டு மக்களும் பனிமயத் தாயின் பேராலயத்தை ஆண்டு முழுவதும் தரிசித்து அவளது அற்புதங்களைப் பெற்றுச் செல்வது அனைவரும் அறிந்த உண்மை. இந்த எழில் மிகு பேராலயம் முத்துநகரில் உருவானதே அன்னை செய்த மாபெரும் அற்புதங்களில் ஒன்றாகக் கருதலாம். இன்று 425 ஆண்டுகளாக முத்துநகரை அலங்கரித்து வரும் இப்பேராலயத்தின் ஆரம்ப வரலாறு கற்போரின் மனதை நெகிழ வைக்கும் அற்புதமும், அதிசயமும் நிறைந்த ஒன்றாகும். இந்த அற்புத, அதிசயமான வரலாற்றை இங்கு தொகுத்தறிவோம்.
வணிகம் செய்யும் நோக்குடன் கி.பி. 1498 முதல் இந்தியாவுக்கு வந்தவர்கள் போர்த்துக்கீசியர்கள். இவர்கள் வணிகச் சாவடிகள் அமைக்கும் இடங்களிலெல்லாம் கிறிஸ்தவத் திருமறையைப் பரப்பி, ஆலயங்களையும், குருக்களையும் ஏற்படுத்தும் பணியைத் திருத்தந்தையர்கள் போர்த்துக்கல் நாட்டு மன்னர்களிடும் ஒப்படைத்திருந்தனர். அதன் காரணமாக இந்தியாவுக்கு வரும் போர்த்துக்கீசிய கப்பல்களில் சில குருக்களும் வருவது வழக்கமாயிற்று. இவர்களில் முக்கியமானவர்கள் இயேசு சபையைச் சேர்ந்த குருக்களாவர்.
முத்துக்குளித்துறையில் 1535-37-ம் ஆண்டுகளில், போர்த்துக்கீசியரின் ஆதரவில், பரதகுல மக்கள் அனைவருமே திருமுழுக்குப் பெற்று கத்தோலிக்கத் திருமறையைத் தழுவியிருந்தனர். ஆனால் இப்புதிய கிறிஸ்தவர்கள் மத்தியில் ஆன்மீகப் பணிகள் புரியவும், வழிபாடுகள் நிறைவேற்றவும் குருக்கள் எவருமே இருக்கவில்லை. இக்குறையை நீக்க அன்றையத் திருத்தந்தை 3-ம் சின்னப்பரின் வேண்டுகோளுக்கிணங்க புனித லொயோலா இஞ்ஞாசியார், தான் 1541-ம் ஆண்டு புதிதாக நிறுவியிருந்த இயேசு சபையில் முதல் உறுப்பினராக இருந்த புனித பிரான்சிஸ்கு சவேரியாரை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார். இவரே இந்தியாவுக்கு வந்த முதல் இயேசு சபைக் குரு ஆவார். இவர் முத்துக் குளித்துறையில் ஏறக்குறைய 10 ஆண்டுகள் ஆன்மீக மற்றும் சமூக முன்னேற்றப் பணிகளைச் சிறப்பாக ஆற்றினார்.
இதற்கிடையில் போர்த்துக்கீசியர்கள் முத்துக் குளித்துறை முழுவதுமே அதிகாரம் செலுத்தி வந்தனர். அவர்களின் படைப்பலம் அதற்குத் துணையாக அமைந்தது. அவர்கள் மதுரை நாயக்கன், கயத்தாறு மன்னன் போன்ற குறுநில மன்னர்களால் பலவிதமான கொடுமைகளுக்கு ஆளாகி வருந்திய பரதவ கிறிஸ்தவ மக்களின் ஊர்களுக்கெல்லாம் பாதுகாப்பு அளித்து வந்தனர். தங்களின் வணிகக் கப்பல்களின் போக்குவரத்துக்குப் புன்னைக்காயல் ஓர் அகலமான இயற்கைத் துறைமுகம் போல் அமைந்திருந்ததால், அதனைத் தங்களின் வணிகத் தலைமைத் தளமாகவும், போர்த்துக்கீசிய படைவீரர்களின் முக்கிய முகாமாகவும் அமைத்துக் கொண்டுனர். இதனால் முத்துக் குளித்துறையில் பணியாற்ற வந்த இயேசு சபைக் குருக்களும் போர்த்துக்கீசியப் படையினரின் பாதுகாப்பு கிடைக்கும் என் நம்பிக்கையில் புன்னைக்காயலிலேயே தங்களின் முதல் தலைமை இல்லத்தை நிறுவினர். அங்குதான் தமிழ்நாட்டிலேயே முதல் அச்சுக் கூடுத்தை 1578-ம் ஆண்டில் உருவாக்கினார். தமிழ் மேதை சுவாமி என்றி என்றிக்கஸ் எழுதிய “அடியார் வரலாறு, தம்பிரான் வணக்கம்”போன்ற நூல்களை அச்சிட்டு வெளியிட் டார்.
இந்த நிகழ்வுகளையெல்லாம் அறிந்த மதுரை நாயக்கனும், கயத்தாறு மன்னனும் ஒன்று சேர்ந்து புன்னைக்காயல் மீது படையெடுத்து வந்து அங்கு மக்களின் வீடுகளுக்கெல்லாம் நெருப்பு வைத்து அழித்தனர். இதனால் போர்த்துக்கீசிய படையினரும், இயேசு சபைக் குருக்களும் புன்னகைக்காயலிலிருந்து வெளியேறி, தூத்துக்குடியில் குடியேறினர். இது நடந்தது 1579-ம்ஆண்டில். இயேசு சபைக் குருக்கள் தூத்துக்குடியில் ஐந்து அறைகளைக் கொண்டு ஒரு புதிய தலைமை இல்லத்தைக் கட்டியெழுப்பினர்.
தூத்துக்குடியில் ஏற்கனவே புதிய இராயப்பருக்கு (பேதுரு) அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம் ஒன்று இருந்தது. இந்த ஆலயத்தைப் பரத குல மக்களுக்குத் திருமுழுக்கு வழங்கிய குருக்களில் ஒருவரான சுவாமி பேதுரு கொன்சால்வஸ் என்பவர் 1538-ம் ஆண்டில் கட்டி முடித்தார். இவ்வாலயம் அன்று கொச்சி மறைமாவட்டம் 1600-ம் ஆண்டில் உருவாகும் வரை, கோவா மறைமாவட்ட ஆயரின் ஆளுகையின் கீழ் இருந்தது. புனித இராயப்பர் ஆலயமே தூத்துக்குடி வாழ் கிறிஸ்தவ மக்களுக்கெல்லாம் முதல் பங்கு ஆலயமாக விளங்கிற்று. சுவாமி பேதுரு கொன்சால்வஸ்தான் இந்த ஆலயத்தின் முதல் பங்குக் குருவாக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பிறகு அவர் கொச்சிக்கு மாற்றலாகி சென்றுவிட் டார்.
ஆரம்பத்தில் இயேசு சபைக் குருக்கள் புனித இராயப்பர் ஆலயத்தின் பங்குப் பொறுப்பில் இருக்கவில்லை. இதன் காரணமாக அவர்கள் தங்களின் சொந்த வழிபாடு மற்றும் ஆன்மீகக் காரியங்களுக்கென தங்களுக்கென்றே தங்களின் தலைமை இல்லத்தோடு இணைந்தபடி ஓர் அழகிய ஆலயத்தை உருவாக்கினர். இவ்வாலயம் ஆரம்பத்தில் இரக்கத்தின் மாதா (Senhora da Piedade) ஆலயம் என்று அழைக்கப்பட்டுது.
தூத்துக்டியில் இயேசு சபைக் குருக்கள் எழுப்பிய முதல் மாதா ஆலயத்தை மக்கள் சம்பவுல் கோவில் என்றும் அழைத்தனர். அதற்கு காரணம் உண்டு இயேசு சபைக் குருக்கள் கோவாவில் அமைத்த தங்களின் நிர்வாக தலைமை செயலகத்தை சம்பவுல் என்றும் சின்னப்பருக்கு அர்பணித்திருந்தனர். இதனால் மக்கள் அவர்களை சம்பவுல் குருக்கள் என்றும் அழைப்பதுண்டு, தூத்துக்குடி மக்கள் ஆரம்பத்தில் இயேசு சபைக் குருக்களை சம்பவுல் குருக்கள் என்றுதான் அழைத்தனர். மேலும் தூத்துக்குடியில் இயேசு சபைக் குருக்கள் அமைத்த தங்களின் முதல் தலைமை இல்லத்தை புனித சின்னப்பருக்கே அர்பணித்தனர். அதனால் சம்பவுல் கல்லூரி (St. Pauls’ College) என வழங்களாயிற்று அத்துடன் இணைந்திருந்த இரக்கத்தின் பனிமயமாதா ஆலயத்தை மக்கள் தவறுதலாக சம்பவுல் கோவில் என அழைக்கலாயினர். (அதனால் அக்காலத்தில் புனித சின்னப்பருக்கு அர்பணிக்கபபட்ட ஆலயம் எதுவும் தூத்துக்குடியில் இருக்கவில்லை என்பது குறிப்பிடுத்தக்கது).
தூத்துக்குடியின் இந்த முதல் மரியன்னை ஆலயமானது 1582-ம் ஆண்டு உரோமையிலுள்ள பனிமய மாதா பேராலயத்தின் திருவிழா தினமான ஆகஸ்டு 5-ம் தேதி வெகு ஆடும்பரச் சிறப்புடுன் திறந்து வைக்கப்பட்டுது. அன்றையத் தினமே பனிமய மாதாவின் முதல் திருவிழா திருப்பலியும் அங்கு நிறைவேறியது. அன்று முதல் மக்கள் இப்புதிய ஆலயத்தைப் “பனிமய மாதா ஆலயம்” என அழைக்கலாயினர். முத்துக்குளித்துறையிலிருந்தும், உள்நாட்டு ஊர்களிலுமிருந்தும் ஏராளமான மக்கள் இந்த முதல் பனிமய மாதா ஆலயத்தின் திறப்பு விழாவில் மகிழ்ச்சிப் பெருக்கோடு பங்கேற்றனர்.
அற்புத அழகோவியமான புனித பனிமய அன்னையின் சுருபம் தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்த நாள் முதல் அதனை இயேசு சபைக் குருக்கள் தங்களின் தலைமை இல்லத்தின் ஆலயத்திலேயே மக்களின் வழிபாட்டுக்காக வைத்திருந்தனர். அன்னையின் வருகையைத் தொடர்ந்து தூத்துக்குடியில் பல அற்புதங்கள் நிகழத் தொடங்கின. சிறப்பாக, அதுவரை வறட்சியுற்றிருந்த முத்துக்குளிப்புத் தொழிலானது வளம் பெற்று பரத மக்கள் செழிப்போடு வாழத் தொடங்கினர். அதனால் பரத மக்கள் பனிமயத் தாய்க்கு தங்களின் நன்றியின் அடையாளமாக விலையுயர்ந்த பெரிய முத்துக்களைத் தேர்ந்தெடுத்து, இரு அழகிய செபமாலைகள் செய்து, ஒன்றை அன்னையின் கரத்திலும், மற்றதை அவளது திருக்கரம் ஏந்தி நிற்கும் குழந்தை இயேசுவின் பிஞ்சுக் கரத்திலும் தொங்கவிட்டு அழகு பார்த்தனர்.
மதுரை நாயக்கனின் கொடுமைகளிலிருந்து தப்பிப்பதற்காக, பரத குலத் தலைவர்கள் புன்னைக்காயலில் ஒன்று கூடி ஆலோசனை செய்தனர். இறுதியில் ஒரு முக்கிய தீர்மானம் எடுத்தனர். அதன்படி தூத்துக்குடி, வைப்பாறு, வேம்பாறு போன்ற ஊர்களில் வாழ்ந்த பரத மக்களும், சில இந்து மா மக்களும், இயேசு சபையினரும் 1604-ம் ஆண்டில் தூத்துக்குடிக்கு எதிரேயுள்ள ராஜ தீவில் (இன்றைய முயல் தீவில்) குடியேறினர். அங்கு இல்லங்கள் அமைத்து வாழ்ந்தனர். இயேசு சபையினர் ராஜ தீவில் புதியதோர் தலைமை இல்லத்தை நிறுவினர். மேலும் பனிமய அன்னைக்கும் புதிய ஆலயம் ஒன்றைக் கட்டியெழுப்பினர். இவ்வாலயத்திற்கு இயேசு சபையின் கொச்சி மாநிலத் தலைவர் சுவாமி ஆல்பர்ட் லெர்சியோ 1604-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி அடிக்கல் நாட்டினார். இவ்வாலயம் 1606-ம் ஆண்டில் முற்றுப் பெற்றது. பரத மக்கள் தங்களோடு ராஜ தீவுக்குப் பத்திரமாக எடுத்து வந்த பனிமய மாதாவின் அற்புத சுருபத்தை இப்புதிய ஆலயத்தில் ஆடும்பரச் சிறப்போடு கொலுவேற்றி வைத்தனர். இவ்வாலயம் ராஜ தீவில் குடியேறிய மக்களுக்கெல்லாம் பங்கு ஆலயமாக விளங்கிற்று. ஆனால் ராஜ தீவு குடியேற்றம் ஐந்து ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. அக்காலத்தில் கொச்சி மறைமாவட்டு ஆயராக இருந்த அந்திரேயாஸ் இயேசு சபையினரையும் பரத குல மக்களையும் ராஜ தீவிலிருந்து வெளியேறி நிலப் பகுதிக்குத் திரும்புமாறு ஆணை பிறப்பித்தார். அதன்படி ராஜதீவில் வாழ்ந்த அனவைரும் 1609-ம் ஆண்டில் அங்கிருந்து வெளியேறி மீண்டும் நிலப்பகுதியில், தங்கள் தங்கள் சொந்த ஊர்களில் குடியேறினர்.
இடிந்து பாழாகக் கிடந்த புனித இராயப்பர் ஆலயத்தை இயேசு சபையினர் உடனடியாகப் புதுப்பித்து பனிமய மாதாவின் அற்புத சுருபத்தை மக்களின் வணக்கத்திற்காக அங்கே நிறுவினர். மதுரை நாயக்கனால் அழிக்கப்பட்ட தங்களின் தலைமை இல்லத்தையும், அத்துடன் இணைந்தபடி பனிமய மாதா ஆலயத்தையும் 1621-ம் ஆண்டில் எளிய முறையில் மீண்டும் கட்டியெழுப்பினர். பனிமய மாதாவின் சுருபத்தைப் புனித இராயப்பர் ஆலயத்திலிருந்து எடுத்து வந்து இப்புதிய ஆலயத்தில் வைத்துப் பாதுகாத்து வந்தனர்.
ஹாலந்து நாட்டில் “கிழக்கிந்திய வர்த்தகக் கழகம்” உருவானது. இந்த வர்த்தகக் கழகத்தின் ஆதரவில் இந்தியாவுடனும், அதன் அண்டை நாடுகளுடனும் வணிகம் செய்வதற்காக ஹாலந்து நாட்டிலிருந்து டச்சுக்காரர்கள் இந்தியாவுக்கு வரத்தொடுங்கினர். அவர்கள் பிரங்கிகளோடும், துப்பாக்கிகளோடும் வந்தனர். டச்சுக்காரர்கள் கால்வீனியம் என்னும் புரட்சி கிறிஸ்தவ சபையைச் சேர்ந்தவர்கள். கத்தோலிக்கத் திருச்சபைக்கு பயங்கர எதிரிகள். கத்தோலிக்கத் திருமறையின் கொள்கைகளான நற்கருணை, ஓப்புரவு அருட்சாதனம், திருத்தந்தையின் தலைமைப் பதவி, உத்தரிக்கும் தலம், மாதா பக்தி, சுருப வணக்கம் ஆகியவற்றை வன்மையாகக் கண்டனம் செய்தனர். அவர்கள் முதல் முறையாக 1649-ம் ஆண்டில் தூத்துக்குடிக்கு வந்து, அங்குள்ள அரசியல், சமூக, பொருளாதார நிலவரங்களை உளவு பார்த்துச் சென்றனர். பின்னர் 1655-ம் ஆண்டில் இலங்கைத் தீவைக் கைப்பற்றினர். இலங்கையிலுள்ள கொழும்பு நகரைத் தங்களின் வணிகத் தலைமைச் செயலகமாக்கி அங்கு கோட்டையும் கட்டினர். டச்சு ஆளுனரும், மற்றும் டச்சு உயர் அதிகாரிகளும் அங்கு நிரந்தரமாகத் தங்கினர்.
1655-ம் ஆண்டில் டச்சுப் படையின் தளபதியாக இருந்த வன்கோவன்ஸ் என்பவர் போர்த்துக்கீசியப் படையினரை தோற்கடித்துத் தூத்துக்குடியைக் கைப்பற்றினார். இதனால் போர்த்துக்கீசியப் படை வீரர்கள் தூத்துக்குடி மற்றும் கடுலோர ஊர்களிலிருந்து வெளியேறினர். முத்துக்குளித்துறை முழுவதும் டச்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தது. அடுத்து வந்த டச்சுத் தளபதி வன்ரீஸ் என்பவர் தூத்துக்குடியின் பிரதான பகுதியைச் சுற்றி கோட்டைச் சுவர் எழுப்பினார். இப்போது புனித இராயப்பர் ஆலயமும், இயேசு சபையினரின் தலைமை இல்லமும், அதனைச் சேர்ந்த பனிமய மாதா ஆலயமும் டச்சுக் கோட்டைக்குள்ளேயே இருந்தன. எனவே டச்சுப் படையினர் புனித இராயப்பர் ஆலயத்தைத் தங்களின் தங்கும் விடுதியாக மாற்றினர். உள்ளே போர்க் கருவிகளையும் குவித்து வைத்தனர். பனிமய மாதா ஆலயத்தைத் தங்களின் கால்வீனிய மத வழிபாட்டுத் தலமாக மாற்றினர். இந்நிலையில் பரதகுலத் தவைர்கள் புனித பனிமய மாதாவின் அற்புத சுருபத்தை சிவந்தாகுளம், கொற்கை போன்ற இடங்களுக்கு எடுத்துச் சென்று அதனைப் பாதுகாத்து வந்தனர்.
மதவெறி கொண்டு டச்சுக்காரர்கள் தூத்துக்குடி வாழ் பரத மக்களைத் தங்களின் கால்வீனிய மத வழிபாடுகளில் கலந்து கொள்ளுமாறு பலவந்தப்படுத்தினர். இந்த முயற்சியில் டச்சு மத போதகரான பல்ேடயுஸ் என்பவர் மிகத் தீவிரமாக இறங்கினார். ஆனால் அவரது முயற்சிகள் அனைத்தும் படு தோல்வி அடைந்தன. பரத குல மக்கள் கால்வீனிய மத வழிபாடுகளை மிகுந்த மனத் துணிவோடு புறக்கணித்து விட்டுனர். தோல்வி கண்டு பல்ேடயுஸ் பெரும் ஏமாற்றத்துடன் இலங்கைக்குத் திரும்பி விட் டார். இதனால் கோபமடைந்த டச்சுப் படை வீரர்கள், பழிக்குப் பழி வாங்கும் நோக்குடுன், முத்துக் குளித்துறை ஊர்களில் பணியாற்றி வந்த இயேசு சபைக் குருக்களை கடுலோர ஆலயங்களிலிருந்து வெளியேற்றி உள் நாட்டுப் பகுதிகளுக்கு விரட்டியடித்தனர். மேலும் நாகப்பட்டினம், வேம்பாறு, வைப்பாறு, மணப்பாடு போன்ற ஊர்களிலிருந்த அழகிய மாதா ஆலயங்களை இடித்துத் தரைமட்டுமாக்கினர். இறுதியில் தூத்துக்குடியில் டச்சுக் கோட்டைக்குள்ளிருந்த இயேசு சபைத் தலைமை இல்லத்தையும், அதனோடு இணைந்த பனிமய மாதா ஆலயத்தையும் 1695-ம் ஆண்டில் ஒருநாள் இரவோடு இரவாக இடித்துத் தரைமட்டுமாக்கி விட்டு, அந்த இடத்தைத் தங்களின் இனத்தவரை அடுக்கம் செய்யும் கல்லறைத் தோட்டமாக மாற்றினர். இதுவே இன்று வரை “கிரகோப்” என்று அழைக்கப்படுகிறது. “கிரகோப்” என்றாலே டச்சு மொழியில் கல்லறைத் தோட்டம் என்றுதான் பொருள்.
டச்சுக்காரர்களிடமிருந்த மத வெறியினால் அவர்களின் வணிகம் மிகவும் நலிவடையத் தொடுங்கியது. கடுலோர மக்களின் வெறுப்புக்கும், பகைக்கும் அவர்கள் ஆளாகினர். தங்களின் வணிக செயல்பாடுகளை வளப்படுத்த தூத்துக்குடி கத்தோலிக்க மக்களின் ஆதரவு மிகவும் தேவை என்பதை டச்சு அதிகாரிகள் உணர்ந்தனர். வணிகப் போக்குவரத்துக்கு பரத குலத் தலைவர்களின் ஒத்துழைப்பும் அவசியம் எனக் கண்டனர். அதனால் டச்சுக்காரர்கள் தங்களின் மத வெறியை சற்று குறைத்துக் கொள்ள முன் வந்தனர். 1699-ம் ஆண்டில் தூத்துக்குடிக்கு வந்த புதிய இடிக்கப்பட்ட ஆலயங்களையெல்லாம் மீண்டும் கட்டியெழுப்ப அனுமதி அளித்தார்.
அச்சமயத்தில் தூத்துக்குடியின் பங்குக் குருவாக இருந்தவர் இயேசு சபையைச் சேர்ந்த சுவாமி விஜிலியுஸ் சவேரியுஸ் மான்சி என்பவர். டச்சுக்கதாரர்களால் வெளியேற்றப்பட்டு அவர் தூத்துக்குடிக்கு வெளியேயுள்ள துப்பாஸ்பட்டி என்ற இடத்தில் புனித இஞ்ஞாசியாரின் பெயரால் ஒரு குடிசைக் கோவிலும், பங்கு இல்லமும் அமைத்து, அங்கு கால்நடையாக வரும் தூத்துக்குடி பங்கு மக்களுக்கு வழிபாடுகள் செய்து வந்தார். தூத்துக்குடியின் பங்கு நிர்வாகமும் அங்குதான் நடந்தது. ஆனால் டச்சுககாரர்கள் தங்களின் மதவெறியைத் தணித்துக் கொண்டபின், சுவாமி விஜிலியுஸ் மான்சி மீண்டும் தூத்துக்குடிக்கு வந்து கிரகோப் கல்லறைத் தோட்டத்திற்கு வெளியே மிகவும் எளிய முறையில் ஒரு பங்கு இல்லத்தை அமைத்து அங்கே குடியிருந்தார். சீர்குலைந்து கிடுந்த புனித இராயப்பர் ஆலயத்தையும் கட்டியெழுப்பினார். அதுவே மீண்டும் தூத்துக்குடியின் பங்கு ஆலயமாக மாறியது. கொற்கையில் நாடோடியாக இருந்த பனிமயத் தாயின் அற்புத சுருபத்தை மீண்டும் தூத்துக்குடிக்கு வரவழைத்து அதனைத் தனது பங்கு இல்லத்தின் மேல்மாடியில், பெட்டுகப் பீடம் (almare) ஒன்று செய்து உள்ளே வைத்துப் பாதுகாத்து வந்தார். புனித இராயப்பர் பங்கு ஆலயம் பாதுகாப்பற்ற நிலையிலிருந்ததால், டச்சுக்காரர்களின் அச்புறுத்தல் எந்நேரமும் வரலாம் என்று அஞ்சியதால் அவர் அன்னையின் சுருபத்தை அவ்வாலயத்தில் நிறுவ விரும்பவில்லை. இவ்வாறு சுமார் ஏழு ஆண்டுகளாய்ப் பனிமயத் தாய் பங்கு இல்லத்தின் மேல்மாடியில் குடியிருந்தாள்.
சுவாமி விஜிவியுஸ் மான்சி தினந்தோறும் இரவில் நித்திரைக்குச் செல்லுமுன் பனிமயத் தாயின் சுருபத்திற்கு முன்னால் தரையில் மண்டியிட்டு, தனது இல்லப் பணியாளர்கள் அந்தோணி, அருளப்பன் ஆகியோருடன் செபமாலை செபிப்பது வழக்கம்.
பனிமய அன்னைக்கு அழகியதோர் கற்கோவில் புதிதாக எழுவதற்குக் காரணமாக இருந்த அந்த அதிசய நாள் நெருங்கி வந்தது. அது 1707-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. அன்று இரவில் இடியும், மின்னலும் கூடிய பெரும் மழை பெய்து கொண்டிருந்தது. சுவாமி விஜிலியுஸ் மான்சி வழக்கம்போல் அன்னையின் சுருபமிருந்த பெட்டகப் பீடத்தில் மெழுகுவர்த்தி ஒன்றை ஏற்றி, தரையில் மண்டியிட்டு செபிக்க ஆரம்பித்தார். வெளியே இன்னமும் பலத்த மழை! தொலைவில் இடியோசையும் கேட்டது.
பனிமயத் தாயின் சுருபத்திற்கு முன்னால் சுவாமி விஜிலியுஸ் மான்சி ஏற்றி வைத்திருந்த மெழுகுவர்த்தி திடீரென அணைந்தது. அது நள்ளிரவு கடந்து திங்கள் கிழமை ஆரம்பிக்கும் நேரம். மெழுகுவர்த்தி அணைந்ததும் சுவாமி விஜிலியுஸ் மான்சி தரையிலிருந்து எழுந்தார். விளக்கு ஒன்றைக் கொண்டு வருமாறு தனது பணியாள் அந்தோணியிடம் கேட்பதற்காக தான் மண்டியிட்ட இடத்திலிருந்து சிறிது நகர்ந்தார். அதே சமயத்தில் இல்லத்தின் கூரையைக் கிழித்துக் கொண்டு பயங்கரமான ஓர் இடி பனிமய அன்னையின் சுருபத்தின் மீது விழுந்தது. சுவாமி விஜிலியுஸ் மான்சி இடியின் அதிர்ச்சியில் உணர்வற்றுப் போனார். அவர் மீண்டும் தனது சுய நினைவுக்கு வந்ததும், அங்கு நடந்திருந்த மாபெரும் அற்புதத்தைக் கண்டார். அன்னையின் சுருபத்தின் மீது இடி விழுந்தும் அது யாதொரு சேதமுமின்றி அப்படியே இருந்தது. இடியின் கந்தகப் புகையால் மட்டும் அது கருநீல நிறமாக மாறியிருந்தது. மேலும் அன்னையின் சுருபத்திற்கு முன்னால் நின்று கொண்டிருந்த சுவாமி விஜிலியுஸ் மான்சி இடியிலிருந்து தப்பி உயிர் பிழைத்திருப்பதே அன்னை செய்த மற்றொரு அற்புதம்! அன்னையின் பீடத்திலிருந்த மெழுகுவர்த்தி மட்டும் அணையாதிருந்தால், அவர் தான் மண்டியிட்டிருந்த அதே இடத்தில் இடிக்குப் பலியாகி இருப்பார். மெழுகுவர்த்தி அணைந்ததே அன்னை செய்த அற்புதமே என்பதை சுவாமி விஜிலியுஸ் மான்சி உணர்ந்து கொண்டார். அங்கு விழுந்த இடியானது அவர் சுவரில் தொங்க விட்டிருந்த சில புனிதர்களின் படங்களையும், கதவு நிலைகளையும் உடைத்து சேதப்படுத்தியிருந்தது. அவருடைய பணியாளர்கள் இருவரும் இடியின் அதிர்ச்சியினால் உணர்விழந்து தரையில் விழுந்து கிடந்தனர். தனது உயிர் காத்த பனிமய அன்னைக்குத் தனது நன்றியின் சின்னமாகவும், அன்னை செய்த அற்புதத்தைக் காலமெல்லாம் உலக மக்களுக்குப் பறை சாற்றி பனிமய அன்னைக்குப் பென்னம் பெரிய புதியதோர் கற்கோவிலை எழுப்ப சுவாமி விஜிலியுஸ் மான்சி அன்றே தீர்மானித்துக் கொண்டார்.
பொழுது விடிந்தது. இடியினால் கறை படிந்து போன அன்னையின் அற்புத சுருபத்தை மக்களின் பார்வைக்கு வைக்கும்படியாக அவர் அதனை மாடியிலிருந்து கீழே இறக்கி புனித இராயப்பர் ஆலயத்தில் வைத்தார். தூத்துக்குடி வாழ் மக்கள் திரள் திரளாக வந்து அன்னையின் கருமையான கோலத்தைக் கண்டு மனம் வெதும்பி அழுது புலம்பினர். தங்களின் பாவங்களுக்குப் பலியாகவே அன்னை கறைபடிந்து உருமாறிப் போனாள் என்று எண்ணி, மக்கள் தங்கள்மார்புகளில் அடித்துக் கொண்டு நீண்ட நேரம் கதறி அழுதனர்.
பனிமய மாதாவுக்குப் புதிதாக கற்கோவில் அமைக்கும் தனது திட்டத்தை சுவாமி விஜிலியுஸ் மான்சி உடனடியாக செயல்படுத்த முனைந்தார். இடிவிழுந்த அதே இடத்திற்கு நேர் எதிலே புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்ட விரும்பினார். கற்கோவில் எழுப்ப டச்சுத் தளபதியின் அனுமதி தேவை என்பதை அறிந்தார். சுவாமி விஜிலியுஸ் மான்சிக்கு டச்சு மொழி நன்றாகத் தெரியும். அதனால் டச்சுத் தளபதியிடம் புதிய ஆலயத்தைப் பற்றி டச்சு மொழியில் விளக்கமாகப் பேசி அவருடைய அனுதாபத்தைப் பெற்றார். டச்சுத் தளபதியும் பனிமய அன்னைக்குப் புதிய ஆலயம் கட்ட அனுமதி வழங்கினார். ஆனால் அந்த ஆலயத்தைக் கற்களால் கட்ட அனுமதி மறுத்துவிட்டார். காரணம் போர்க் காலங்களில் எதிரிகள் அந்த கற்கோவிலை அரணாகப் பயன்படுத்தக்கூடும் என அஞ்சினார். அதனால் சுவாமி விஜிலியுஸ் மனமுடைந்து போனார். இருப்பினும் அன்னையின் ஆதரவை நம்பி அவர் கொழும்பிலிருந்த டச்சு ஆளுனருக்கு முடங்கல் எழுதி, அதில் புதிய ஆலயத்தின் அளவுகளைத் தெளிவாகக் குறிப்பிட்டு, அதனை கற்களால் கட்டுவதற்கு அனுமதி வேண்டினார். டச்சு ஆளுனரும் சுவாமி விஜிலியுஸ் மான்சி தனது முடங்ளில் கூறியிருந்த காரணங்களை அலசிப் பார்த்துவிட்டுப் புதிய ஆலயத்ைத கற்களால் கட்டுவதற்கு அனுமதி வழங்கினார். இதனால் டச்சுத் தளபதி சுவாமி விஜிலியுஸ் மான்சி மீது சற்று கடுமையாக நடந்து கொள்ள ஆரம்பித்தார். அதன் விளைவாக ஆலயம் கட்டுவதில் அவ்வப்போது சில தடைகள் குறுக்கிட்டன. ஆனால் பனிமய அன்னையின அருளால் தடைகளெல்லாம் விரைவில் நீங்கின.
இறுதியில் 1712-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி (இடிவிழுந்த அதே நினைவு நாளில்) மங்கிய மாலை வேளையில் பனிமய அன்னையின் புதிய கற்கோவிலுக்கு அடிக்கல் நாட்டு விழா மிக சிறப்பாக நடைபெற்றது. பல ஊர்களிலிருந்தும் ஏராளமான மக்கள் இந்த அடிக்கல் நாட்டு விழாவில் மகிழ்ச்சியோடு பங்கு பெற்றனர். இதில் வியப்பு என்னவென்றால் ஆலயம் எழுப்புவதற்குப் பல தடைகளை ஏற்படுத்திய அதே டச்சுத் தளபதியும், சில டச்சு வீரர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அந்த வகையில் அவர்கள் தங்களின் வணிகத்திற்கு மக்களின் ஆதரவைப் பெற விரும்பினர். அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற மக்கள் ஒவ்வொருவரும் அன்னைக்குத் தங்களின் அன்பின் அடையாளமாக ஒரு கல்லை அடித்தலத்தில் பதித்து விட்டுச் சென்றனர். அன்னையின் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டிய பிறகும் எதிர்ப்புகள் தொடர்ந்தன. தூத்துக்கடிக்குப் புதிதாக வந்த டச்சுத் தளபதி, ஆலய அளவுகள் பற்றி சில பொய்யான தகவல்களையும், சுவாமி விஜிலியுஸ் மான்சி பற்றி சில பொய்யான குற்றச் சாட்டுகளையும் பட்டியலிட்டு கொழும்பிலிருந்த டச்சு ஆளுனருக்கு அனுப்பி வைத்தார். இதனால் ஆலயக் கட்டுமான பணி தடைபட்டுக் கொண்டிருந்தது. இதற்கு ஒரு முடிவு காணும் நோக்குடன் சுவாமி விஜிலியுஸ் மான்சி புதிதாக உருவாகயிருக்கும் அன்னையின் கற்கோவிலின் உண்மையான அளவுகளை வரைபடத்துடன் குறிப்பிட்டு, அத்துடன் தூத்துக்குடி டச்சுத் தளபதி தன் மீது சுமத்தியுள்ள குற்றச் சாட்டுகளுக்கு மறுப்பும் தெரிவித்து முடங்கல் ஒன்று தயாரித்து அதனை அன்றைய பரதகுல சாதித் தலைவரான தொன் எஸ்தேவான் தெ குருஸ் மூலம் கொழும்பிலிருந்த டச்சு ஆளுனருக்குக் கொடுத்து அனுப்பினார். சுவாமி விஜிலியுஸ் மான்சி அனுப்பிய முடங்கலைப் படித்த ஆளுனர், உண்மை நிலவரங்களைப் புரிந்து கொண்டு, புதிய ஆலய கட்டுமான வேலையை ஆரம்பிக்குமாறு மிகவும் பரிவோடு அனுமதி எழுதிக் கொடுத்தார். அத்துடன் பொய்க் குற்றச் சாட்டுகள் கூறிய தூத்துக்குடி டச்சுத் தளபதியை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்கி கொழும்புக்கு வருமாறு ஆணை பிறப்பித்தார்.
மகிழ்ச்சிப் பெருக்கோடு சுவாமி விஜிலியுஸ் மான்சி பனிமயத் தாய்க்குப் புதிதாகக் கற்கோவில் கட்டும் பணியை ஆரம்பித்தார். ஆலயத்தின் கட்டிட வேலைகள் துரிதமாக நடந்தன. ஒரே ஆண்டில் ஆலய வேலை முற்றுப் பெற்றது. ஆலயக் கூரையில் கனரா ஓடுகளும் பதிக்கப்பட்டன.